உசிலம்பட்டி, உசிலம்பட்டி அருகே மாட்டு தீவன சோளப் பயிரில் நுாற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி பயிர்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளை அச்சமடைய செய்துள்ளது.இந்தியாவில் கொரேனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் தீவிரமாக பரவும் நிலையில், மறுபுறம் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெப்பும் பரவலாக இருந்தது. ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகளும், விவசாயிகளும் திணறினர். தமிழகத்தில் இதன் பாதிப்பு இல்லாத நிலையில் உசிலம்பட்டி பகுதியில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு துவங்கியுள்ளது.புத்துார் சரவணன் என்பவர் தோட்டத்தில் மாட்டுத்தீவனத்திற்கான சீமைப்புல் வகையைச் சேர்ந்த தீவன பயிரை அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளார். சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து செடிகளை தாக்குகின்றன. பக்கத்தில் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கும் பரவுகின்றன. பாதிப்படைந்த பயிர்களை உசிலம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.இவை பாலைவன வெட்டுக்கிளிகளா என ஆய்வு செய்யவும், இவற்றை கட்டுப்படுத்தவும் வேளாண் விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.