அரியலூர்: 'கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடும், 110 வயது மூதாட்டிக்கு அரசு உதவ வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூர், பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர், பொன்னி, 110. இவரது கணவர், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, கலியமூர்த்தி, 75, உட்பட மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கலியமூர்த்தி மட்டுமே, பொன்பரப்பியில் உள்ளார். மற்றவர்கள் வெளியூரில் வசிக்கின்றனர். பொன்னிக்கு பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் என, 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மூத்த மகன் கலியமூர்த்தி, தாய்க்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, விவசாய கூலி தொழிலாளியான கலியமூர்த்தி, வருமானம் இல்லாமல், மிகவும் கஷ்டப்படுகிறார். தகர ஷீட் போட்ட வீட்டில் தனியாக வசிக்கும் பொன்னிக்கு, அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை, 1,000 ரூபாய் மட்டுமே, ஜீவனத்துக்கு ஆதாரமாக உள்ளது. அதிலும் ஒரு பகுதியை, தன் பேரக் குழந்தைகளின் தின்பண்டங்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு கொடுத்து விடுகிறார். வயது, 110 ஆனாலும் கம்பு ஊன்றி, தனியாகவே பொன்னி வெளியில் நடந்து சென்று வருவதுடன், தன் ஆடைகளை தானே துவைத்து கொள்கிறார். ஆனால், சமைத்து சாப்பிடவோ, வருமானம் ஈட்டும் அளவுக்கோ உடலில் தெம்பு இல்லை. 'எனவே, மூதாட்டியின் உணவு, உடை, பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.