அரியலூர்: 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், விக்னேஷ், 19. செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2017ம் ஆண்டு பிளஸ் 2 படித்த விக்னேஷ், அரசு பொதுத் தேர்வில், 1,006 மதிப்பெண் பெற்றார். பின் கேரளாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும், திருச்சி துறையூர் சவுடாம்பிகா நீட் தேர்வு மையத்திலும் பயிற்சி பெற்று, இரு முறை நீட் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார். வரும், 13ம் தேதி தேர்வு எழுத இருந்தார். சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் விக்னேஷ் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று மதியம், 12:00 மணியளவில், அருகில் உள்ள கிணற்றில் விக்னேஷ் சடலமாக கிடந்தது தெரிந்தது. எலந்தங்குழி கிராம மக்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.