கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2020
23:37

திருப்பூர்:கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வசதியாக, திருப்பூர் மாவட்டத்தில், பரிசோதனை எண்ணிக்கை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, தாராபுரம், உடுமலை நகராட்சிகள், அவிநாசி, காங்கயம், பல்லடம், திருப்பூர் ஒன்றிய பகுதிகளில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 4,446 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொது போக்குவரத்து துவங்கியுள்ளதால், மக்கள் நகர்வு அதிகரித்துள்ளது. இதனால், தொற்று பரவலும் அதிகரிக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி உட்பட பல இடங்களில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை வரை, தினமும், 1,500 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது; கடந்த மாதம், இது, 2,200ஆக அதிகரித்தது. தற்போது, இந்த எண்ணிக்கை, 5,200ஆக உயர்ந்துள்ளது. 'தொற்று பரவல் விரைவாக தெரியவருவதால், சமூக பரவல் கட்டுக்குள் உள்ளது' என, சுகாதார துறையினர் கூறுகின்றனர்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:மாவட்டத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 324 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில், 4,446 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது, மொத்த பரிசோதனையில், 4.2 சதவீதம் மட்டுமே.தேசிய மற்றும் மாநில சராசரியை காட்டிலும் திருப்பூரில் பாதிப்பு குறைவு; இறப்பு விகிதமும், கட்டுக்குள் உள்ளது. மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 4.2 சதவீதமாகவும், இறப்பு விகிதம், 1.8 சதவீதமாகவும் உள்ளது. அதிகபட்சமாக, நேற்று, 5,860 பேருக்கு பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பதறாதீங்க... பத்திரமா இருங்க!மாவட்டத்தில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும், 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், 'இந்த எண்ணிக்கையால், பதட்டமடைய தேவையில்லை. வழக்கமான பரிசோதனை எண்ணிக்கை, உயர்த்தப்பட்டதால், தொற்று அதிகம் பரவியதை போன்று தெரியும். பொதுபோக்குவரத்து துவங்கியிருப்பதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்' என, நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X