| மூன்று வேளையும் இன்சுலின் ஊசி Dinamalar
மூன்று வேளையும் இன்சுலின் ஊசி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2020
23:58

மூன்று வேளையும் இன்சுலின் போட்டுக்கொண்டு, வேதனையுடன் உயிர் வாழ்வதை பெரியவர்களே பெரும் சோதனையாக கருதும் இந்த காலத்தில், இப்படி ஊசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளின் நிலையை, நினைத்துப்பார்க்கவே மனது வலிக்கிறது.இப்படி நினைத்துப்பார்த்து உருகியவர்களில், ஒருவர்தான் கிருஷ்ணன் ஸ்வாமிநாதன். டைப் ஒன் சர்க்கரை நோயால் இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் என டாக்டர்கள் கைவிட்ட ஒரு குழந்தையை, கடைசி நேரத்தில் காப்பாற்றிய இவர், அக்குழந்தையை படிக்க வைத்து கைதுாக்கி விட்டார். இன்று அந்த குழந்தை ஒரு கல்லுாரி மாணவி!இது போன்ற குழந்தைகளுக்காகவே, 2004ல் இவரால் உருவானதுதான், 'இதயங்கள்' அறக்கட்டளை. வெறும் 800 ரூபாயில் துவங்கிய இந்த டிரஸ்ட், இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உதவி வருகிறது.இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் வேலை பார்த்த இவர், தற்போது நம் நாட்டு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்காக கோவையில் தங்கி பாடுபட்டு வருகிறார்.குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குறித்து சொல்லுங்களேன்...என்ற நம் கேள்விக்கு,''பிறந்த சில நாட்களிலேயே, சில குழந்தைகள் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். 'வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல, 'இன்சுலின்' இல்லாமல் ஒரு நாளும் இவர்களால் வாழ முடியாது. கோவையில் மட்டுமே இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் இரண்டாயிரம் பேர் இருக்கலாம்,'' என்கிறார் டாக்டர் ஸ்வாமிநாதன்.இதில், ஏழை குழந்தைகளுக்கு இந்நோய் வந்து விட்டால், அதை விட பரிதாபம் வேறில்லை. பெற்றோர் சம்பாதிப்பது உணவுக்கே போதாத நிலையில், மாதம் 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டிய இன்சுலின் சிகிச்சைக்கு, எங்கே போவார்கள்.இது போன்ற குழந்தைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை தேர்வு செய்து, நிதி திரட்டி ஒவ்வொரு நாளும், இன்சுலின் வசதியை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது இவரது 'இதயங்கள்' டிரஸ்ட்.இதில், இவரது மனைவி டாக்டர் சுஜிதா, கோவைபுதுார் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ், டாக்டர்கள் சுஜிதா, சுரேஷ் மாதவ கண்ணன், சபாபதி பிரகாஷ், நம்பி உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களால் தினமும், 500 குழந்தைகளுக்கு மேல் இன்சுலின் பெற்று உயிர் வாழ்கின்றனர்.தற்போது சந்தைக்கு வந்துள்ள புதிய இன்சுலின் பம்ப் விலை ரூ.2லட்சத்து 29 ஆயிரம். இந்தியாவில் இதை தயார் செய்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள் இந்த அறக்கட்டளையினர்.''ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மாதம், 3000 ரூபாய் மதிப்பிலான இன்சுலின் தேவைப்படுகிறது. இதற்கான நிதி போதுமானதாக இல்லை. இன்னும் 100 குழந்தைகளுக்கும் மேல் உதவிக்காக காத்திருக்கின்றனர்.ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் மட்டுமல்ல, கூலி வேலைக்கு செல்வோரும் கூட 50, 100 ரூபாய் என அனுப்பி வைத்துள்ளனர். இறக்கும் தருவாயில் ஒரு பெரியவர் 4 லட்ச ரூபாய் தானமாக கொடுத்துள்ளார்,'' என்று உருகுகிறார் கிருஷ்ணன் ஸ்வாமிநாதன்.ஒவ்வொருவரும் உதவினால், இன்சுலினை சார்ந்திருக்கும் குழந்தைகளை காக்க முடியும். அவர்களாகவே இன்சுலின் வாங்கும் அளவுக்கு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வரை படிக்க வைத்து உதவ வேண்டும் என்பதே இவரது நோக்கம். அதன்பின், அக்குழந்தைகளால் மற்ற குழந்தைகளுக்கும் உதவ முடியும் என்று நம்புகிறது இந்த அறக்கட்டளை.டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதனுடன் கைகோர்த்து, உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 8526421150, 9042858882 ஆகிய எண்களிலும், idhayangal.org என்ற இணையதளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.''ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மாதம், 3000 ரூபாய் மதிப்பிலான இன்சுலின் தேவைப்படுகிறது. இதற்கான நிதி போதுமானதாக இல்லை. இன்னும் 100 குழந்தைகளுக்கும் மேல் உதவிக்காக காத்திருக்கின்றனர்,''-டாக்டர் கிருஷ்ணன் ஸ்வாமிநாதன்.ஒவ்வொருவரும் உதவினால், இன்சுலினை சார்ந்திருக்கும் குழந்தைகளை காக்க முடியும். அவர்களாகவே இன்சுலின் வாங்கும் அளவுக்கு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வரை படிக்க வைத்து உதவ வேண்டும் என்பதே இவரது நோக்கம். அதன்பின், அக்குழந்தைகளால் மற்ற குழந்தைகளுக்கும் உதவ முடியும் என்று நம்புகிறது இந்த அறக்கட்டளை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X