ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த சமத்துாரில், வால்பாறை ரோட்டில் கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், போக்குவரத்து பாதித்து விபத்துக்கள் ஏற்படுகிறது.பொள்ளாச்சி - வால்பாறை ரோடு இருவழிப்பாதையாக உள்ளது. இந்த ரோட்டில், பல ஆண்டுகளாக சமத்துார் பகுதியில் வீடுகளும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இதனால், போக்குவரத்து பாதித்து, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் சமத்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆக்கிரமிப்புகள் உள்ள இடத்தில் குறுகலான ரோட்டிலிருந்து வருவோர், 'சென்டர் மீடியனில்' மோதி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.குறுகிய ரோட்டில், சென்டர் மீடியனும் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாகி விபத்துக்கள் ஏற்படுகிறது. அலட்சியம் காட்டாமல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சமத்துாரில் வீடுகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். அந்த நிலங்களுக்கு பட்டா உள்ளதா, எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன, என கண்டறியப்படும். விரைவில் அரசு நிலம் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு விரிவுபடுத்தப்படும்,' என்றனர்.