அடையாறு : அடையாறு அருகே, 'ஆன்லைன்' மோசடி செய்து, தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி, 15.56 லட்சம் ரூபாய் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர், மோகன், 42; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, கல்யாண் என்ற நில புரோக்கர் வழியாக, திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன், 55, ரமேஷ் ரெட்டி, 58, அறிமுகம் ஆகினர்.'ஆன்லைனில், 'சாப்ட் குலோபல் பே' என்ற 'ஆப்' வழியாக, பணம் பரிவர்த்தனை செய்தால், அதிக கமிஷன் கிடைக்கும்' என, இருவரும் மோகனிடம் கூறி உள்ளனர்.
இதை நம்பிய மோகன், இருவரும் கூறியபடி, இவர்களது வெளிநாட்டு நண்பரின் ஆலோசனையில், வங்கி கணக்கை இணைத்து, இணையதள, 'அக்கவுன்ட்' துவங்கி உள்ளார்.கடந்த மாதம், விர்ச்சுவல் மணி டிரான்ஸ்பர் வழியாக, வெளிநாட்டில் இருந்து, 2 கோடி ரூபாய் அனுப்பியதாகவும், அதை, இந்திய பணமாக மாற்றி தரும்படியும், மோகனிடம் ரமேஷ் ரெட்டி கேட்டுள்ளார்.மோகன் தன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, எந்த பணமும் வரவில்லை என தெரிந்தது. கடந்த மாதம், 10ம் தேதி, மோகனை, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திற்கு கடத்தி சென்றனர்.
அங்கு வைத்து, '40 லட்சம் டாலர் அனுப்பி உள்ளோம்; ஏமாற்ற பார்க்கிறாயா; 50 லட்சம் ரூபாய் இப்போதே கிடைக்கணும்' என, இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.'சென்னையில் வைத்து பணம் தருகிறேன்' என மோகன் கூறியதும், அதே காரில் சென்னைக்கு வந்தனர். மோகன், தன் மனைவி, மகள் நகையை அடமானம் வைத்து, 15.56 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில், இருவரும் கூறிய, 'ஆன்லைன்' முகவரி போலியானது என தெரிந்ததும், அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், போலியான இணைய தள முகவரி துவக்க வைத்து, பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, பிரபாகரன், ரமேஷ் ரெட்டி ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர்.