| குடியிருப்பு விவகாரம் ஆணையம் உத்தரவு Dinamalar
குடியிருப்பு விவகாரம் ஆணையம் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2020
06:21

சென்னை : பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு விவகாரத்தில், வீட்டு வசதித் துறை செயலர் பதிலளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது.



சென்னை, பீட்டர்ஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்க செயலர் முத்துசெல்வன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:சென்னை, பீட்டர்ஸ் காலனியில் உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், அரசு ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என, 342 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றன.நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து, வணிக வளாகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.



கொரோனா பாதிப்பு, குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றை கருத்தில் வைத்து, இந்த கல்வியாண்டு முடிவடையும் வரை, குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையே, வீட்டு வசதி வாரியத்தின், பட்டினப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் காந்தி, குடியிருப்போரை காலி செய்யும்படி, மிரட்டி வருகிறார். வீடுகளை காலி செய்யாவிட்டால், குடிநீர், கழிவு நீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர்.



கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டை காலி செய்ய நிர்ப்பந்தம் செய்வது நியாயமற்றது. எனவே, வரும் கல்வியாண்டு முடிவடையும் வரை, குடியிருக்க அனுமதி வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழ்நாடு வீட்டு வசதித் துறை முதன்மை செயலர், வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பிய நோட்டீசில், 'இரண்டு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X