| சம்பா பருவத்தில் நெல் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு Dinamalar
சம்பா பருவத்தில் நெல் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2020
09:28

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் பருவமழை தொடர்வதாலும், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாலும், நடப்பு சம்பா பருவத்தில், நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


நெற்பயிரில் விதைப்பண்ணை அமைத்து தரமான சான்று விதை உற்பத்தி செய்வது லாபகரமாக உள்ளதால், அதற்குரிய தொழில் நுட்பங்கள், வழிமுறைகளை, ஒவ்வொரு விவசாயியும் கையாள வேண்டும். விதைப்பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், முதல் கட்டமாக, சம்பா பருவத்துக்கு உண்டான மத்திய கால அல்லது நீண்ட கால ரக ஆதார நிலை ஒன்று அல்லது ஆதார நிலை இரண்டு நெல் விதைகளை, வேளாண் விரிவாக்க நிலையம் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும். மேலும், அதற்கான விற்பனை பட்டியல், வெள்ளை நிற சான்று அட்டை, விதைப்பண்ணை அமைவிடம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர் மூலம் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். நெல் விதைப்பண்ணையானது, திருந்திய நெல் சாகுபடி முறையிலோ இயந்திர நடவு மூலமாகவோ அல்லது எட்டு அடிக்கு, ஓரடி இடைவெளி விட்டோ நடவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையானது, உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதைச்சான்று நடைமுறைகளின்படி, 13 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தி செய்யப்படும் விதை நெல்லுக்கு வேளாண் துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம். இவ்வாறு, விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X