| கலப்பு திருமணம் செய்தவரை தாக்கி மொட்டையடிப்பு; தாய், சகோதரர் உள்பட 6 பேருக்கு காப்பு Dinamalar
கலப்பு திருமணம் செய்தவரை தாக்கி மொட்டையடிப்பு; தாய், சகோதரர் உள்பட 6 பேருக்கு காப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2020
09:07

வாழப்பாடி: சிறுமியை, கலப்பு திருமணம் செய்த வாலிபரை கடத்திச்சென்று தாக்கியதோடு, மொட்டையடித்து அவமானப்படுத்தினர். இதனால், அந்த வாலிபரின் தாய், சகோதரர் உள்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி, சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, வரதராஜ் மகன் அருள்குமார், 25; வாழப்பாடியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தார். தாண்டானூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, வாழப்பாடியில் உள்ள மளிகை கடையில் பணிபுரிந்தார். அப்போது, அருள்குமார், சிறுமி இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்த்தனர். கடந்த ஜனவரியில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரியில், சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாழப்பாடி போலீசார், கடத்தல் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், அவர்கள், நாமக்கல், பள்ளிபாளையத்தில் இருப்பது, அருள்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. அவர்கள் உள்பட ஏழு பேர், கடந்த, 23ல், அருள்குமாரை சின்னமநாயக்கன்பாளையத்துக்கு கடத்திச்சென்று, தென்னை மட்டையால் தாக்கி, 'மொட்டை' அடித்து அவமானப்படுத்தினர். வாழப்பாடி போலீசார், படுகாயமடைந்த அருள்குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, அருள்குமார் புகார்படி, தாய் அபிலா, 52, சகோதரி பரிமளா, 35, சகோதரர் நேரு, 32, உறவினர்கள் மணிகண்டன், 31, ரகுநாதன், 28, கார் டிரைவர் ரகுவர்மன், 26, ஆகியோரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மற்றொரு சகோதரர் வெங்கடேசன், 30, என்பவரை தேடிவருகின்றனர்.


போக்சோ வழக்கு: அருள்குமாரை திருமணம் செய்த சிறுமி, தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, 18 வயது பூர்த்தியாகாததால், சிறுமி கடத்தல் வழக்கை, 'போக்சோ' வழக்காக, போலீசார் மாற்றியுள்ளனர். இதனால், மருத்துவ சிகிச்சைக்கு பின், அருள்குமாரை கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X