சேலம்: போலீஸ் தேர்வில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு உடற்தகுதி தேர்வை, பொதுப்பிரிவில் நடத்துவதால் வாய்ப்பு பறிபோவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில், போலீஸ், சிறை, தீயணைப்பு துறைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவருக்கு, உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 2016க்கு முன் நடந்த தேர்வில், பொதுப்பிரிவினர், ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினர் என, மூன்று வகை உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2017, 18, 19ல் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், எஸ்.ஐ., தேர்வுகளில், பொதுப்பிரிவினர், ராணுவத்தினர் என, இரு பிரிவுகளில் மட்டும் நடத்தப்பட்டன. இதில், விளையாட்டு பிரிவினருக்கு உடற்தகுதி தேர்வு, பொதுப்பிரிவினருடன் இணைத்து நடத்தப்பட்டது. விளையாட்டு பிரிவினரை பொறுத்தவரை, அவர்கள் எந்த தகுதி தேர்விலும் வெற்றி பெற, தங்களை தயாராக வைத்திருப்பர். ஆனால், பொதுப்பிரிவினர், எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பின், உடற்தகுதி திறன் தேர்வுக்கு, தங்களை தயார்படுத்த பயிற்சி மேற்கொள்வர். நிலைமை இப்படி இருக்க, பொதுப்பிரிவினருடன், விளையாட்டு பிரிவினரையும் சேர்த்து நடத்தும் நிலையில், பொதுப்பிரிவினர் தோல்வி அடைந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆயுதப்படை டி.எஸ்.பி.,க்கள் கூறுகையில், 'விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில், தேர்வில் பங்கேற்போர், 1,500 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், 100 மீ., அல்லது 400 மீ., ஓட்டத்தில் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெறுவர். பொதுப்பிரிவினர், விளையாட்டு பிரிவினர் அளவுக்கு, தங்களை உடல் ரீதியாக பயிற்சி மேற்கொள்ளாததே இந்த நிலைக்கு காரணம்' என்றனர். எஸ்.ஐ., தேர்வுக்கு தயாராவோர் கூறுகையில், 'போலீஸ் உடற்தகுதி தேர்வில், ராணுவ வீரர்களை போல், பிரத்யேகமாக, விளையாட்டு வீரர்களுக்குள்ளே தேர்வு நடத்த வேண்டும். அப்படி நடத்தினால், பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து, அதில் கலந்து கொள்வோர் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும்' என்றனர்.