கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், இரண்டு பக்கங்களிலும் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் வளர்ந்துள்ள புதர்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையில், இரண்டு பக்கங்களிலும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஒட்டி மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக, மழை நீர் சென்று ஓடைகளில் இணைகிறது. மழையால் கால்வாயில் மண்கள் அடித்து சென்று தேங்கியது. இதில், புதர் வளர்ந்து, கால்வாய் இருப்பதே தெரியாமல் இருந்தது. தற்போது, மழை பெய்வதால், தண்ணீர் செல்ல வழியில்லாமல், ரோட்டில் தேங்கி நின்றது.தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிணத்துக்கடவு சிங்கராம்பாளையம் முதல் தாமரைக்குளம் வரையுள்ள பகுதியில், புதர் அகற்றும் பணி நடக்கிறது.இதனால், மழை தண்ணீர் கால்வாய் வழியாக சென்று, ஓடையில் சேர்வதால், ரோட்டில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.