விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே நெடிமோழியனுாரில் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக வந்த இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் நெடிமோழியனுாரில் தெற்கு ரயில்வே துறை சார்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ரயில்வே சுரங்க பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ஆம் தேதி நெடிமோழியனுார் மற்றும் சுற்றுப்புற 15 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க போராட்டம் நடத்தினர்.இதையடுத்து திண்டிவனம் சப்- கலெக்டர் அனு தலைமையில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.நேற்று ரயில்வே சுரங்கப்பாதையில் பில்லர் அமைக்க ஹிட்டாச்சி இயந்திரம் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. இதைப் பார்த்து ஆத்திர மடைந்த நெடிமோழியனுார் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 2017ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி பணியைச் செய்ய வேண்டும் என கூறி லாரியை சிறை பிடித்து அருகில் உள்ள அரசு பள்ளியில் நிறுத்தி உள்ளனர்.இதனால் பணியை செய்ய வந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து, மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கேயே தங்கி உள்ளனர்.