திண்டிவனம்; திண்டிவனத்தில் அனுமதியில்லாமல் பட்டாசு கடை வைத்திருந்த கடைகளில், சப்கலெக்டர் அதிரடியாக சோதனை நடத்தினார்.
திண்டிவனம் பகுதியில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமல்லாமல், திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிக்களுக்காக பட்டாசு, வானவெடிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால், திண்டிவனத்தில் உரிமம் பெறாமல் நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் இருப்பது குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுகுறித்து திண்டிவனம் சப்கலெக்டர் கவனத்திற்கு சென்றது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் சப்கலெக்டர் அனு தலைமையில், நேரு வீதியிலுள்ள மூன்று கடைகளில் நேற்று நேற்று மாலை 4 மணியளவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அந்தப்பகுதியிலுள்ள மூன்று கடைகளில் உரிமம் பெறாமல் விற்பனைக்காக வைத்திருந்த சிவகாசி தயாரிப்பு பட்டாசுகள் பண்டல், பண்டல்களாக குடோனில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஆய்வின் போது தாசிதார் செல்வக்குமார்(பொறுப்பு), வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன், வி.ஏ.ஓ.,செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
அதிக அளவில் பட்டாசுகள் குடோனில் பதுக்கி இருந்ததால், டவுன் டி.எஸ்.பி.,கணேசனிடம் நடவடிக்கை எடுக்குமாறு சப்கலெக்டர் பரிந்துரை செய்தார். இதன் பேரில் டவுன் டி.எஸ்.பி.,தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து, வேனில் ஏற்றினர்.