பெரம்பலுார்:-தலித் என்பதால், தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக, அரியலுார் அருகே பஞ்., தலைவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
அரியலுார் மாவட்டம், தா.பழூர் யூனியன், இருகையூர் பஞ்சாயத்து தலைவராக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி, 71, உள்ளார். துணைத் தலைவராக உள்ள, தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி, அவரது கணவர் சேகர், ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள் அனைவரும் சேர்ந்து, தலைவர் தட்சிணாமூர்த்திக்கு தெரியாமல், மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் உட்பட பல்வேறு பணிகளை, ஒதுக்கி கொண்டுள்ளனர்.
இது குறித்து கேட்டால், தட்சிணாமூர்த்தியை மரியாதை குறைவாகவும், அவதுாறாகவும் பேசி உள்ளனர். வேதனையடைந்த அவர், நேற்று காலை, தா.பழூர் யூனியன் அலுவலகம் முன், ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம், பி.டி.ஓ., ஸ்ரீதேவி பேச்சு நடத்தி, தர்ணாவை கைவிட வைத்தார்.
சிகிச்சை
தட்சிணாமூர்த்தி கூறியதாவது: நான் தலித் என்பதால், பஞ்சாயத்தில் எந்த பணியையும் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.கடந்த, 6ம் தேதி,மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட, யூனியன் அலுவலகம் சென்றேன்.அப்போது, பி.டி.ஓ., ஸ்ரீதேவி, 'எழுத படிக்க தெரியலையே, ஏன் தேர்தல்ல நின்னீங்க' என்று அவமானப்படுத்தினார். பி.டி.ஓ., தரக்குறைவாக பேசியதன் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு, சில நாட்களாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தலித் என்பதால், என்னை தலைவராக செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டரிடம் புகார்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே க. மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தாங் கரைப்பட்டி ஊராட்சி தலைவர் பழனிசாமி. இவர், நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜாவிடம் அளித்த மனு:நான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், ஊராட்சி துணைத் தலைவர் சேகர் என்னை தரையில் உட்காருமாறு மிரட்டுகிறார்.
ஊராட்சி பணி செய்ய விடாமல் தடுக்கிறார்.இரண்டு மாதங்களாக செலவிடப்படும் பணிகளுக்கு, பணம் வழங்க, கையெழுத்திட மறுக்கிறார். என்னால், மக்களுக்கு எந்த பணியும் செய்ய முடிய வில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.