விருதுநகர் : மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாகங்களில் விபத்தில் சிக்கிய டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஏலம் விடாமல் குவித்து வைத்து பழைய இரும்பு கோடவுனாக மாற்றப்பட்டு வருகிறது.
சாலை விபத்துக்களில் சிக்கும் வாகனங்களை போலீசார் மீட்டு ஸ்டேஷன் கொண்டு வருகின்றனர். இவற்றின் இன்ஜின் எண், பதிவு எண் சரிபார்க்கப்படும். பின் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வுக்கு பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். இதில் திருட்டு வாகனங்களும் அடங்கும். விபத்துக்கு பின் வாகனங்களை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும் போது வாகன உரிமையாளர்கள் அதை வாங்க முன் வருவதில்லை. சிலர் ராசி இல்லாத வாகனம் என வழக்கு முடிந்தாலும் உரிமை கோராமல் விட்டு செல்கின்றனர்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஸ்டேஷன் வளாகங்களில் விபத்தில் சிக்கிய டூவீலர், இலகு, கனரக வாகனங்கள் பல ஆண்டுகளாக குவிந்து கிடக்கிறது. இவற்றை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவது வழக்கம். பிற மாவட்டங்களில் விபத்து வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருதுநகரை பொறுத்தமட்டில் பழைய இரும்பு கோடவுனாக ஸ்டேஷன்கள் மாற்றப்பட்டு வருகிறது. இதனால் இட நெருக்கடி, ஸ்டேஷன்கள் மிடுக்கு இழந்து வெறுமனே காட்சியளிக்கிறது..........
நடவடிக்கை எடுக்கலாம்
விருதுநகரில் 90 சதவீத ஸ்டேஷன்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதன் வளாகங்களில் ஒன்றுக்கும் பயன்படாத துருப்பிடித்து இத்துப்போன வாகனங்களை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவது வீண். பயன்படாத வாகனங்களை பழைய இரும்பக்காக ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரெங்கராஜன், சமூக ஆர்வலர்................