மந்தம் ; விழுப்புரத்தில் கோலியனூரான் வாய்க்கால் பணி... பருவமழைக்குள் சீரமைத்து முடிக்கப்படுமா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மந்தம் ; விழுப்புரத்தில் கோலியனூரான் வாய்க்கால் பணி... பருவமழைக்குள் சீரமைத்து முடிக்கப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2020
01:29

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரூ. 8 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட கோலியனுாரான் வாய்கால் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்துவருகிறது.



பருவமழைக்குள் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.விழுப்புரம் நகரில் உள்ள பெரிய வாய்கால்களில் செல்லும் கழிவுநீர் அனைத்தும் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், தாமரைக்குளம் வழியாக, சாலை அகரம், கோலியனுார் வரை சென்றடைகிறது. இந்த கழிவுநீர் செல்லும் வாய்காலில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அடைத்து கொள்வதால், கழிவுநீர் தேங்கி நின்றுவிடுகிறது.இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இரவில் கொசு தொல்லைகளில் சிக்கி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.



இது மட்டுமின்றி, மழை காலங்களில் வாய்காலில் கழிவுநீர் நிரம்பி, குடியிருப்புகளுக்கு முன் குளம் போல் தேங்கி நிற்பதோடு, குழந்தைகள், முதியோர் உட்பட பலருக்கும் தொற்று நோய் ஏற்படுகிறது.இந்த சூழலில், விழுப்புரம் நகராட்சி, நபார்டு வங்கி உதவியோடு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெளிமேடு கிராமத்தில் துவங்கி, விழுப்புரம் வழியாக கோலியனுார் வரை, கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் கடந்த 2017 ம் ஆண்டு துவங்கியது. 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு கி.மீ., பாலம் பணிகளும், 2 கி.மீ., 2.50 மீட்டர் அகலத்தில் கோலியனுாரான் வாய்கால் அமைக்கும் பணிகள் துவங்கியது.இதில், முதற்கட்டமாக தெளிமேடு கிராமத்தில் தலைப்பு மதகு உருவாக்குவதற்கான கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தலைப்பு மதகு மூலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரியும் தண்ணீர் இங்கு சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் வெளியேறும் மாசுபடிந்த நீர் பிரித்து, கழிவுநீர் வாய்காலுக்கு அனுப்பப்படுகிறது.இது போல், விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் பகுதியில் தலைப்பு மதகு உருவாக்குவதற்கான கட்டட பணிகள் நடந்துள்ளது. பொதுப்பணி துறை (நீர்வளம்) பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ள இந்த பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது, தெளிமேடு - லட்சுமிபுரம் கிராமம் வரை 750 மீட்டர் வாய்க்கால் வெட்டி இரு அடி ஆழம் அமைக்கும் பணிகளும், விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் சிதலமடைந்துள்ள இடங்களில் 750 மீட்டர் வாய்க்கால் கட்டும் பணிகளும் முடிவுபெறாமல் உள்ளது.



இது குறித்து பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகள் கூறியதாவது,இந்த பணிகள், ஒரு வாரத்தில் துவங்கி, பருவமழை காலம் வருவதற்குள் விரைவாக கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவு பெறும். அதுவரை, கோலியனுாரான் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.



இதன் மூலம் கழிவுநீர் கால்வாயில் தேங்காமல் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான வழி ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.விழுப்புரத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணிகள், பருவமழை காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X