திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக கட்டப்படும் பயோ-டாய்லெட் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயணிகள் கழிப்பிட வசதி கிடைக்காமல் அவதியடைகின்றனர்.
திண்டிவனம், நகராட்சி சார்பில் இந்திராகாந்தி பஸ் நிலையம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பஸ் நிலையம் என இரண்டு இடத்தில் செயல்பட்டு வருகின்றது.இதில் தொலை துாரம் செல்லும் பஸ்கள் பெரும்பாலானவை, மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்திற்கு வருகின்றது.இந்நிலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், பஸ் பயணிகளின் வசதிக்காக நகராட்சி சார்பில் நம்ம டாய்லெட் மற்றும் நடமாடும் டாய்லெட் செயல்பட்டு வந்தது.
இதில் நடமாடும் டாய்லெட் பயன்பாடு இல்லாமல் வீணாகிபோனது. இதற்கடுத்து செயல்பட்டு வந்த மேம்பாலத்தின் கீழ், புதுச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு தடையாக இருந்த நம்ம டாய்லெட் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் அகற்றப்பட்டது.பஸ் நிலையத்தின் கீழ் பயணிகளின் வசதிக்காக இருந்த நகராட்சி கழிப்பிடங்கள் முற்றிலும் இல்லை என்பதால், பல மாதங்களுக்கு மேலாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் டாய்லெட் வசதி இல்லாமல் பொது இடங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டது.
இதனால் பஸ் நிலைய பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பயோ--டாய்லெட் (பயோ -டைஜஸ்டர் முறை) கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் பயோ -டைஜஸ்டர் முறையில், செப்டிக் டேங்கிற்கு புதிய கேபின் பொருத்தும் பணி கடந்த ஜூலை 3ம் தேதி நடந்தது.
இந்த பயோடேங்க், காற்றோட்டமில்லாத முறையில் செயல்படுத்தப் படுகிறது. டேங்கில் 30 சதவீத, 'இனாகுலம்' பாக்டீரியாக்கள் நிரப்பப்படும்.இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகள், காற்று இல்லாத சூழ்நிலையில், 6, - 8 மணி நேரத்துக்குள் இரட்டிப்பாகி தன்னைப் பெருக்கிக் கொள்ளும். செப்டிக் டேங்கில் உள்ள, 99.9 சதவீத கழிவுகளை இவை மட்கச் செய்கின்றன.பயோ-டாய்லெட்டிற்கான கேபின் பொறுத்தப்பட்டு மூன்று மாதம் கடந்து விட்ட நிலையிலும், மேற்கொண்டு டாய்லெட் அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.
பணிகள் ஆரம்பித்த போது, புதியதாக அமைக்கப்பட உள்ள பயோ-டாய்லெட்டில், பொது மக்களின் வசதிக்காக இரண்டு டாய்லெட்டுகள் மற்றும் இரண்டு பாத்ரூம்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்விற்கு பிறகு, பஸ் நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்வதால், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் பஸ் நிலைய பகுதியில் நகராட்சி சார்பில் கழிப்பிட வசதி இல்லாமல் இருப்பது, பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி அதிகாரிகள், பயோ-டாய்லெட் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.