விருதுநகர்:ஒரே ஒரு போட்டில் வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டாவதால் விருதுநகர் கடம்பன்குளம் வெட்டருவாளுக்கு விறகு வெட்டிகளிடையே மவுசு அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சி அரிவாள் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தவும், விவசாய பணிகளுக்கும் புகழ் பெற்றது. திருப்பாச்சி அரிவாள் சினிமாவிலும் இடம் பிடித்தது. திருப்பாச்சியை அடுத்து விருதுநகர் அருகே கடம்பன்குளம் வெட்டருவாளுக்கு விறகு வெட்டிகளிடையே மவுசு அதிகரித்து வருகிறது.
கடம்பன்குளம் கொல்லன்பட்டறை தொழிலாளி கணேசன் கூறியதாவது: பயனற்ற சரக்கு வேன்களின் இரும்பு பட்டையை கரி அடுப்பில் நன்கு பழுக்க வைத்து வெட்டரிவாள் தயாரிக்கிறேன். சீமைக்கருவேல மரங்களை வெட்டும் போது அரிவாளை லாவகமாக உபயோகிக்க ஏற்றது. ஒன்னே கால் கிலோ எடையில் அரிவாள் தயாரிப்பதால் ஒரே ஒரு போட்டில் வெட்டு ஒன்று; துண்டு ரெண்டாகி விடும்.
இதனால் விறகு வெட்டிகளிடையே கடபன்குளம் அரிவாளுக்கு என்றுமே மவுசு தான். விலை ரூ.250. தென் மாவட்டங்களில் இருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர் என்றார்.