விருதுநகர்:விருதுநகரில் பல்வேறு இடங்களில் சாலையை புதுப்பித்து கழிவுகளை ஓரத்திலேயே கொட்டி விபத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே வழிவகுக்கின்றனர்.
மாவட்டத்தில் ரூ.பல கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழைய சாலை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். பின் சாலையோரம் கிராவல் மண் பரப்பி சமன் செய்ய வேண்டும். கழிவுகளை லாரிகளில் ஏற்றி சென்றால் செலவாகும் என கருதும் ஒப்பந்ததாரர்கள் சிலர் புதுப்பிக்கப்பட்ட சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். சாலையோரம் கிராவல் பரப்பி சமன் செய்வது கிடையாது.
நக்கலக்கோட்டை - டி. மீனாட்சிபுரம் இடையே சமீபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பில் நெடுஞ் சாலைத் துறை சாலையை புதுப்பித்தது.பழைய சாலை கழிவுகளை அகற்றாமல் ஓரத்திலேயே கொட்டி விட்டனர். கண்டுகொள்ள வேண்டிய அதிகாரிகள் ஏனோ' கப்சிப் ஆகி விட்டனர். இவர்களின் கையாளாகாத காரியத்தால் இரவில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.
சாலை பணியை முறையாக மேற்கொள்ளவும், இதை அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.