ராஜபாளையம்:ராஜபாளையம் சத்திரப்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும் என ரயில் பயனாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நகரின் குறுகிய தெருக்கள், சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நெரிசலை தவிர்க்க சத்திரப்பட்டியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது ஓரளவு நெரிசல் குறையும். எனினும் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக வரும் இலகு ரக வாகனங்கள் சுலபமாக செல்ல வசதியாக ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
ரயில் பயனாளர் அமைப்பு தலைவர் ஜெகந்நாதராஜா கூறியதாவது: அண்ணா நகர், காந்தி நகர் வழியே லெவல் கிராசிங் அமைத்தால் புது பஸ் ஸ்டாண்ட், சத்திரப்பட்டிக்கு சுலபமாக செல்ல இயலும். மதுரையை அடுத்து சரக்கு லாரிகளை ரயிலில் ஏற்றிச் சென்று இறக்கும் 'ரோல் ஆன் ரோல் ஆப்' சேவையை ராஜபாளையத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். இதனால் 50 சதவீதம் செலவு குறையும். ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும், என்றார்.