செங்குன்றம் : மழைநீர் தேங்கி சேதடைந்த, மாதவரம் நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை, செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஊராட்சி அலுவலகம் முதல், வடபெரும்பாக்கம் - மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு வரையிலான, 2 கி.மீ., துார சாலையில், ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.அந்த சாலையில், குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டு, அவை சீரமைக்கப்படவில்லை. அதனால், ஏற்கனவே சேதமடைந்த சாலையில், தற்போது மழைநீர் தேங்கியதால், அந்த இடங்கள் மேலும் சேதமடைந்துள்ளன.
அங்குள்ள பள்ளத்தை எச்சரிக்க, கல், பனை மரத்துண்டு ஆகியவை போடப்பட்டுள்ளன. இதனால், இரு வழிப்பாதையில் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்காமல் இருக்க, ஒரு வழிப்பாதையில் பயணிக்கின்றனர்.அப்போது, வழக்கமாக பாதையில் செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நெடுஞ்சாலைத்துறையினர், சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைத்து, அதில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.