சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கத்தில் உள்ள, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, 33.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், இயற்கை தோட்டத்திற்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த ஆர்.எம்.அழகப்பா செட்டியார், 1946 மார்ச், 13ம் தேதி, தனக்கு சொந்தமான, 33.30 ஏக்கர் பரப்பளவு இடத்தை, சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். இதில், 3,000 சதுர அடி பரப்பளவில், 2016ல், தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்கள், அடிக்கடி ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன.
இதுகுறித்து, நம் நாளிதழ் அடிக்கடி சுட்டிகாட்டியதால், பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டன.இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடங்களை தவிர்த்து, மீதமுள்ள இடங்களை பாதுகாப்புடன் பராமரிக்கும் பொருட்டு, இயற்கை தோட்டம் அமைக்கப்பட உள்ளன.
இங்கு, பாரம்பரிய மர வகைகளான, மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இலந்தை, கொடுக்காபுளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை உள்ளிட்ட, 10 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளன.இதற்காக, 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. முதற்கட்டமாக, 500 பாரம்பரிய மர வகைகளை நட்டு, இயற்கை தோட்டம் அமைக்கும் பணியை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னை, கோட்டூர்புரத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 23 ஆயிரத்து, 800 சதுர அடி பரப்பு கொண்ட நிலத்தில், 20 ஆயிரத்து, 724 சதுர அடியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 வகையான, 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும், வளசரவாக்கம், ராயலா நகர், 2வது பிரதான சாலையில், 10 ஆயிரம் சதுர அடி நிலத்தில், 6,000 சதுர அடியில், 8.72 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 வகையான மரங்கள், 1 மீட்டர் இடைவெளி வீதம், 762 மரக்கன்றுகள் நடப்பட்டு, அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நகர்புற காடுகளினால், நகர்ப்புற மக்களுக்கு, மாசு குறைக்கப்பட்டு, காற்றின் துாய்மையை மேம்படுத்தும். நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்கள் மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடைக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை கமிஷனர் ஆல்பி ஜான் வர்கீஷ், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.