விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்கு வரும் தென்பெண்ணை ஆற்று தண்ணீர் தொட்டிகளில் பொதுமக்கள் துணி துவைப்பது மற்றும் சோப்பு போட்டு குளிப்பதால் குடிநீரில் அசுத்தம் கலக்கும் அவல நிலை நீடித்து வருகின்றது.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு மக்களுக்கு, விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றில் 20க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுத்து, அங்குள்ள பம்ப் ஹவுசில் பொருத்தியுள்ள, ராட்சத மின் மோட்டார்கள் மூலம், நகராட்சி வரை தரைக்கு அடியில் பைப் புதைக்கப்பட்டு தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த பைப்புகளில், எல்லீஸ்சத்திரத்தில் இருந்து வழுதரெட்டி வரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், நகராட்சிக்கு தண்ணீர் அனுப்பும்போது, உடைப்பு உள்ள பகுதிகளில் தண்ணீர் வீணாகி சாலையோரத்தில் வழிந்தோடுகிறது. மேலும், இச்சாலையில் உள்ள சில இடங்களில் கழிவுநீர் குட்டைகளின் நடுவிலும், நகராட்சி குடிநீர் பைப் உடைந்துள்ளது.
இதனால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து செல்கிறது. இதேபோன்று, தண்ணீர் செல்லும் வழியில் காற்று போகும் வகையில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டிகளில் தேங்கும் தண்ணீரில் சிலர் சோப்பு குளியலும், சிலர் துணிகள் துவைத்தும் அசுத்தம் செய்து வருகின்றனர். இந்த அசுத்தம் கலந்த தண்ணீர் மீண்டும் அந்த தொட்டியின், வழியாக பைப்பிற்குள் செல்கிறது.
அந்த தண்ணீரை மக்கள் குடிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நகராட்சி தண்ணீர் தொட்டிகளில் அசுத்தம் கலப்பதை தடுக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.