திருவொற்றியூர் : தஞ்சாவூரிலிருந்து, நடந்தே திருவொற்றியூர் வரை வந்து, வழி தெரியாமல் தவித்த இளம்பெண்ணை, பொதுமக்கள் மீட்டனர்.
திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நேற்று நிர்கதியாக நின்று கொண்டிருந்தார்.இவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அதே பகுதியைச் சேர்ந்த சக்தி, சமூக ஆர்வலர்கள் சரவணன், கஜா ஆகியோர், அப்பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்தார். மேலும், தஞ்சாவூர், புலவர் நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எனக்கூறிய நிலையில், வேறு எந்தத் தகவலும் அவருக்கு சொல்லத் தெரியவில்லை.
திருவொற்றியூர் போலீசார் விரைந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.பெண்ணின் ஊரை கூகுள் உதவியுடன் கண்டறிந்தனர். மேலும், பலகட்ட முயற்சிகளுக்கு பின், இந்த பெண்ணின் புகைப்படத்தை, ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.அவர், அந்த பெண் ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போனதாகவும், குடும்பத்தினர் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் வீடில்லாதவர்கள் தங்கும் விடுதியில், அப்பெண்ணை, போலீசார் தங்க வைத்தனர். குடும்பத்தினர் நேரில் வந்து, அப்பெண் அழைத்துச் செல்ல இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.ஒரு மாதமாக நடந்தே, தஞ்சாவூரில் இருந்து இளம்பெண் ஒருவர் சென்னை வந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.