சேலம்: அரசு பள்ளி மாணவருக்கு, முழு நேரம், 'நீட்' பயிற்சி அளிக்க, விடுதியுடன் கூடிய மையங்கள் அமைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்டவைக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், தனியார் மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுக்கு, முழு நேர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களோடு போட்டியிட முடியாமல், அரசு பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கைவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதை தவிர்க்க, அரசு சார்பில், ஒன்றியம் வாரியாக, மையங்கள் அமைத்து, விடுமுறை நாள், மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஆனாலும், இதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. 3,500க்கும் மேற்பட்ட மருத்துவ சீட்களில், ஒற்றை இலக்கத்தை எட்டி பிடிக்கவே போராடும் நிலை உள்ளது. நடப்பு கல்வியாண்டில், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஜீவித்குமாரும், பள்ளிப்படிப்பை முடித்து, முழு நேரம், ஓராண்டு 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற பின்பே சாதிக்க முடிந்தது. இதன்மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்ற மாநிலங்களை விட, சாதித்து காட்ட முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அரசு சார்பில், 'ஆன்லைன்' முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்றியம் வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு, வார விடுமுறை நாளில், மாணவர்களை, அங்கு வரவழைத்து பயிற்சியளிக்கின்றனர். மாணவ, மாணவியர், தங்கள் வீடுகளிலிருந்து மையங்களுக்கு வர, பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பஸ் பயண செலவு, உணவு, வீட்டிலிருந்து வர துணைக்கு ஆட்கள் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் தடைக்கல்லாக உள்ளன. அத்துடன், பள்ளிகளில் பெரும்பாலும் தமிழ் வழியில் படித்துவிட்டு, 'நீட்' தேர்வு பயிற்சிக்கு ஆங்கிலத்தில் தயாராக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், ஆங்கிலத்தில் உள்ளதை போன்ற பயிற்சி கட்டகங்கள், தமிழில் இன்னும் உருவாக்கப்படவில்லை. மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வுக்கு தயாராகும் முறையிலிருந்து, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் முறை முற்றிலும் மாறுபாடானது. தனியார் பயிற்சி மையங்கள், 'நீட்' தேர்வு முறையை முழு நேரமாக பயிற்றுவிக்கிறது. ஆனால், இரண்டுக்கும் இடையே அரசு பள்ளி மாணவர்கள் தடுமாறுவதால், நுழைவுத்தேர்வில் சாதிக்க முடியவில்லை. ஒன்றியத்துக்கு, ஒரு மையம் வீதம் அமைப்பதை விட, மாவட்டத்துக்கு ஒரு மையம், முழு நேர உறைவிட பயிற்சி முகாமாக அமைப்பது நல்ல பலன் அளிக்கும். பல வட மாநிலங்களில், 'சூப்பர் 30' எனும் திட்டத்தை அரசே நடத்துகிறது. மாவட்டத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முழு நேர பயிற்சிக்கு தயார் செய்யும் அளவு, விடுதியுடன் தனி மையம் அமைத்து, சிறந்த ஆசிரியர்களால் பயிற்சி அளித்தால், இன்னும் பல மாணவர்கள், அரசு பள்ளிகளிலிருந்து உருவாக்க முடியும். இதை, அரசு முன்னெடுத்தால், கூடுதல் செலவினங்கள் கூட இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.