கோவை:திருநங்கையை கழுத்து அறுத்து கொலை செய்து, தண்ணீர் டிரமிற்குள் சடலத்தை மறைத்து தப்பிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா, 65. கோவை மாவட்ட திருநங்கை சங்க தலைவராக பல ஆண்டாக பொறுப்பு வகித்து வந்தார். திருநங்கையர் பலர் சேர்ந்து, வடகோவையில், 'டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில், பிரியாணி ஓட்டலை கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்தனர். இதில், சங்கீதாவும் பங்குதாரராக சேர்ந்தார்.
அவருடன் ஓட்டல் நடத்துபவர்கள், சங்கீதா மொபைல் போனுக்கு அழைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்ததால், சந்தேகமடைந்து நேற்று வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், கதவை திறந்து பார்த்தபோது, சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்து, அங்கிருந்த தண்ணீர் டிரமிற்குள், சடலத்தை அடைத்து வைத்திருந்தது தெரிந்தது.
சங்கீதாவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சொத்தை அபகரிக்க கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சங்கீதா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது வீட்டு முன் திருநங்கையர் திரண்டனர்.
திருநங்கையர் கூறுகையில், 'கொரோனா பாதிப்பு காலத்தில், மாவட்ட நிர்வாகம் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உதவி செய்தார். 'கொலையாளிகளை கைது செய்ய, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.