தாம்பரம் : ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம், பராமரிக்கப்படாமல், தனியார் நிறுவனத்திற்கு, வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
சென்னை, தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் அருகே, சமுதாய நலக்கூடம் உள்ளது.இதன் அருகே, ஊராட்சியின் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சமுதாய நலக்கூடத்தை பராமரிக்க, ஊராட்சி நிர்வாகம் முன்வராததால், இதை பயன்படுத்த, பொதுமக்கள் முன்வரவில்லை.இந்நிலையில், சமுதாய நலக்கூடத்தை, தனியார் உணவகம் ஒன்றுக்கு, வாடகைக்கு விட்டு, குடோனாக, ஊராட்சி நிர்வாகம் மாற்றி உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.பகுதி மக்கள் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு மேல், சமுதாய நலக்கூடம் அருகில், குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில், அதை அகற்றி, வேறு இடத்தில் கொட்டவும், கட்டடத்தை பராமரிக்கவும், பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளும், ஊராட்சி செயலரும், நடவடிக்கை எடுக்காமல், போக்கு காட்டி வருகின்றனர்.ஆனால், பிரபல தனியார் உணவகம் ஒன்றிடம், பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு, சமுதாய நலக்கூடத்தை, குடோனாக பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளனர்.அங்கு, உணவகத்திற்கான இனிப்பு வகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சமுதாய நலக்கூடத்தை, யாருக்கும் வாடகைக்கு விடவில்லை' என்றனர்.