அன்னூர்:கோவை வழித்தடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் சொகுசு பஸ்கள் அதிகரிப்பால், அன்னூர் மக்கள் அவதிப்படுகின்றனர்.அன்னூரில் இருந்து, கோவில்பாளையம், சரவணம்பட்டி, வழியாக, காந்திபுரத்திற்கு, 45, 45b, 45c, 45d, 45e என, 20 டவுன் பஸ்கள் இயங்குகின்றன. இதில் தற்போது, சொகுசு டவுன்பஸ்களே அதிகமாக இயக்கப்படுவதாக, அன்னூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அன்னூர் மக்கள் கூறுகையில், 'சொகுசு டவுன் பஸ்களில், குறைந்த பட்ச கட்டணமாக, 11 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அன்னூரில் இருந்து, கோவைக்கு, 35 ரூபாய் வாங்குகின்றனர். சில இடங்களில் மட்டும் நிற்கும் மப்சல் பஸ்ஸில், கோவைக்கு, 19 ரூபாயும், சாதாரண டவுன் பஸ்களில், 16 ரூபாயும் வசூலிக்கின்றனர். ஆனால் கூடுதலாக எந்த வசதியும் இல்லாத சொகுசு பஸ்களில், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.'கொரோனாவால், வருமானம் குறைந்துள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் சொகுசு பஸ்களுக்கு பதில், சாதாரண டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.
சாதாரண டவுன் பஸ்ஸில் குறைந்த பட்ச கட்டணமாக, 5 ரூபாய் இருக்கிறது. சாதாரண டவுன் பஸ்ஸில் செல்ல, அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது' என்றனர்.சி.டி.சி., கிளை மேலாளர் முத்துசாமி கூறுகையில் ''கோவைக்கு, ஏழு சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு, 14, 25, ஏ.ஆர்3, என பல சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகரித்தால், கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.