அன்னூர்:'நுாலகங்களில் வாசிக்க அனுமதிக்க வேண்டும்' என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னூர் ஒன்றியத்தில், அன்னூர், சொக்கம்பாளையம், பொகலூர் மற்றும் பொன்னேகவுண்டன் புதூரில், கிளை நூலகங்களும், நல்லி செட்டிபாளையம் மற்றும் செம்மாணி செட்டிபாளையத்தில், ஊர்ப்புற நூலகங்களும் உள்ளன.இந்த நூலகங்களில், பல லட்சம் புத்தகங்கள் உள்ளன.
கடந்த மாதம், தமிழக அரசு, நூலகங்களை திறக்க, அனுமதி அளித்தது. எனினும், காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே, நூலகம் செயல்படும். புத்தகங்களை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். நூலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதி இல்லை' என, அரசு தெரிவித்துள்ளது. இது வாசகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அன்னூர் கிளை நூலக வாசகர் வட்டத்தினர் கூறுகையில், 'ஹோட்டல், பேக்கரி, கோவில், ஜிம் என அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. எனவே, கிளை நூலகங்களில், சமூக இடைவெளி விட்டு, அமர்ந்து புத்தகங்கள் மற்றும் செய்திதாள்களை படிக்க, அரசு அனுமதிக்க வேண்டும்' என்றனர்.