திருப்பூர்: நல்ல புத்தகங்கள் அறிவை வளர்க்கும். பள்ளி படிப்பையும் தாண்டி நம் அறிவை வளர்ப்பவை நுால்களும், நுாலகங்களும்தான். வசதி உள்ளவர்கள் வீட்டிலேயே நுாலகம் வைத்திருப்பார்கள். வசதியற்றவர்கள் படிக்க ஏற்படுத்தப்பட்டதுதான் பொது நுாலகம்.திருப்பூரில் மாவட்டத்தில், 186 நுாலங்கள் உள்ளன.
அனைத்திலும் ஆயிரக்கணக்கான அறிவுசார் புத்தகங்கள் பல தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. மக்களிடம் வாசிப்பை ஊக்கவிக்க நாளிதழ், மாத இதழ்களும் வைக்கப்படுகின்றன. இவற்றினை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, வாசகர்கள், பாதசாரிகள் யார் வேண்டுமானலும் சென்று படிக்கலாம்.மாவட்ட மைய நுாலகத்தில் மட்டும், தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் நாளிதழ் வாயிலாக அன்றாட நிகழ்வுகள், பொது அறிவை வளர்த்து வந்தனர். இருப்பினும் கடந்த செப்., முதல் நுாலகங்கள் திறக்கப்பட்டும், செய்தித்தாள் வாசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. வாசகர்கள் தினந்தோறும் நுாலகங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
இதுகுறித்து குமார் நகர் பகுதியை சேர்ந்த வாகசர் முருகன் கூறுகையில், ''டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வருகிறேன். கொரோனாவால், நுாலகங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போட்டித்தேர்வர்களுக்கு மட்டும் சமூக இடைவெளியுடன் படிக்க அனுமதியுண்டு. ஆனால் நாளிதழ்கள் படிக்க அனுமதிக்கவில்லை. அன்றாட நிகழ்வுகளை, 'அப்டேட்' செய்ய நாளிதழ் மட்டுமே கைக்கொடுத்த நிலையில், இதனை முற்றிலும் நிறுத்தியது ஏற்புடையதல்ல'' என்றார்.அறிவுக்கு முட்டுக்கட்டைகனவு இலக்கிய வட்ட தலைவர் சுப்ரபாரதிமணியன் கூறுகையில், ''மக்களிடம் வாசிப்பு ஆர்வம் அதிகரித்துள்ளது. கிராமங்களை பொருத்தவரை பகுதிநேர நுாலகங்களில் கிடைக்கும் செய்தித்தாள் மூலமே நாட்டு நடப்பை தெரிந்து கொள்வோர் அதிகம். தற்போது நாளிதழ்களுக்கான நிதியை நிறுத்தி, அனைத்திற்கும் அரசு தடைவிதித்துள்ளது.
மக்களின் வாசிப்பு பழக்கத்திற்கு அரசே முட்டுக்கட்டை போடலாமே!'' என்றார்.கூட்டம் கூட அதிக வாய்ப்புள்ள பஸ் போக்குவரத்து, மார்க்கெட், டாஸ்மாக் போன்றவை வழக்கம்போல் இயங்குகின்றன. நுாலகங்களில், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.எனவே, குழந்தைகளிடம் நோய்பரவும் வாய்ப்பு குறைவு. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தால், தொற்று அபாயம் இருக்காது.