பல்லடம்:விவசாய தொழிலில் அடுத்த தலைமுறையினர் வருவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, 'நீரா' குறித்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 'நீரா' பானம் குறித்த கருத்தரங்கம் மற்றும் பங்குதாரர் சேர்க்கை முகாம், காரணம்பேட்டை கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.
கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.'நீரா' ஆலோசகர் காளிங்கராஜ் தர்மலிங்கம் பேசியதாவது:கிராமங்கள் அனைத்தும் விவசாய தொழிலை நம்பியே உள்ளன. ஆண்டாண்டு காலமாக விவசாய தொழில் செழித்து விளங்கிய கிராமங்கள், இன்று பல்வேறு பிரச்னைகள் காரணமாக பின்னோக்கி சென்றுள்ளன. வருவாய் குறைவு காரணமாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் இத்தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. விவசாயத்துக்கு அடுத்த தலைமுறைகள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
'நீரா' பானத்தை சந்தைப்படுத்தும் முயற்சியாக உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதில், இணைந்து விவசாயிகள் தென்னை மட்டுமன்றி, ஒட்டுமொத்த விவசாய தொழிலையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.வனம் அமைப்பு அறங்காவலர் சின்னசாமி, மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி உட்பட பலரும் பங்கேற்றனர். வனம் அறங்காவலர் உதயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.