அவிநாசி:பாறைக்குழியில் குளிக்க சென்ற நீரில் சிக்கிய சிறுவர்களின் உடல், நேற்று காலை மீட்கப்பட்டது.அவிநாசி அருகே உள்ள பழங்கரை, பெரியாயிபாளையம், பட்டக்காரர் முக்கு பகுதியில் வசிப்பவர் கஸ்துாரி, 32. கணவர் தமிழ்ச்செல்வன். சென்னையில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுக்கு, அயனேஸ்வரன், 10, பாலன், 9 என இரு மகன்கள் உள்ளனர்.குடும்பத்தை நடத்த வருமானம் போதாததால், கடந்த, 9 மாதங்களுக்கு முன், தமிழ்ச்செல்வன், தனது, 2 மகன்களையும் அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பெரியபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க செய்து, கஸ்துாரியை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியில் சேர்த்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.கொரோனா ஊரடங்கால் சென்னைக்கு சென்ற தமிழ்செல்வன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பெரியாயிபாளையம் திரும்பியுள்ளார். இரண்டு சிறுவர்களும், நேற்று முன்தினம் மதியம், அங்குள்ள ஒரு குட்டைக்குச் சென்று, மீன் பிடித்து தங்கள் வீட்டில் கொண்டு போய் வைத்துள்ளனர்.அதன்பின், இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என தெரியாமல், வழக்கம்போல் உள்ள விளையாட்டு குணத்துடன், அங்குள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றுள்ளனர். எதிர்பாராவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.தீயணைப்பு வீரர்கள், இரவு,11:00 மணிக்கு, சிறுவன் அயனேஸ்வரன் மற்றும் நேற்று காலை, 6:30 மணிக்கு பாலன் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.