பொள்ளாச்சி:பொள்ளாச்சி, தென்குமாரபாளையத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின் போது, ஆளுங்கட்சி பிரமுகர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், தென்குமாரபாளையம் ஆலாந்துறை அம்மன் கோவில் வீதியில், நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, ஆளுங்கட்சியை சேர்ந்த தாமோதரன் என்பவர் வீட்டு சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் புகாரின் பேரில், ஆனைமலை தாசில்தார் வெங்டாசலம் உள்ளிட்ட வருவாய் துறையினர், கோமங்கலம் போலீசாரின் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பு அகற்ற வந்தனர்.அப்போது, சுற்றுச்சுவரை இடிக்க விடாமல், பொக்கலைன் வாகனத்தின் முன்பு அமர்ந்து, தாமோதரன் மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சி தரப்பில் இருந்து, ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம் அளிக்க அழுத்தம் அளிக்கப்பட்டதால், வருவாய் துறையினர் திரும்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தை மொபைல்போனில் படம் பிடித்த உள்ளூர் இளைஞர்கள், சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். ஆளுங்கட்சி செல்வாக்கால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பிச் சென்ற சம்பவம் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.