உடுமலை:நீண்ட இழுபறிக்குப்பின் தி.மு.க., வில் திருப்பூர் மாவட்டம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.தேர்தலை முன்னிட்டு கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை குறித்து தலைமை நியமித்துள்ள 'ஐபேக்' நிறுவனம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள் அடிப்படையில் தலா இரு தொகுதி அடங்கிய மாவட்டமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.இதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கிய நிர்வாகிகள், சென்னை தலைமை அலுவலகம் அழைக்கப்பட்டனர். நேற்று காலை மாவட்டம் பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.அவ்வகையில், அவிநாசி, பல்லடம் தொகுதி அடங்கிய திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு பத்மநாபன், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதி அடங்கிய மாநகர் மாவட்டத்துக்கு செல்வராஜ், காங்கயம் மற்றும் தாராபுரம் அடங்கிய கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சாமிநாதன், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் கொண்ட தெற்கு மாவட்டத்துக்கு எம்.எல்.ஏ., ஜெயராம கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.