திண்டிவனம்: தினமலர் செய்தி எதிரொலியால், திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் பஸ் பயணிகளுக்காக பயோ-டாய்லெட் கட்டும் பணி துவங்கியது.
திண்டிவனம், பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நகராட்சி சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பயோ--டாய்லெட் (பயோ டைஜஸ்டர் முறை) கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக திண்டிவனம்- - புதுச்சேரி சாலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் பயோ -டைஜஸ்டர் முறையில், செப்டிக் டேங்கிற்கு புதிய கேபின் பொருத்தும் பணி கடந்த ஜூலை 3ம் தேதி நடந்தது.இதன் பிறகு பல மாதங்களாக மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறாமல் இருப்பது குறித்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததால், பயோ-டாய்லெட் கட்டும் பணி நேற்று முதல் துவங்கியது.இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ''மேம்பாலம் அருகே பயோ-டாய்லெட் கட்டுவதற்கு ஆரம்பத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகு, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே பயோ-டாய்லெட் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, கலெக்டர் உத்தரவின் பேரில் தற்போது பயோ - டாய்லெட் கட்டும் பணி துவங்கியுள்ளது.இந்தப் பணிகள் ஒரு மாத்திற்குள் நிறைவடைந்து, பயோ - டாய்லெட் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும்'' என்று தெரிவித்தனர்.