விழுப்புரம்: விழுப்புரம், வழுதரெட்டி குடியிருப்பு பகுதியில் பல ஆண்டு இருந்து வந்த கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு தீர்வுகாண 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலம் மற்றும் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி துவங்கியுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறி செல்ல போதிய வடிகால் வசதியில்லாததால், கழிவுநீர் முற்றிலும் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் அவலம் நீடித்து வருகிறது. மழை காலங்களில் கழிவுநீரோடு, மழைநீரும் சேர்ந்து குளம்போல் நிற்பதால், அங்குள்ள மக்களுக்கு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது பற்றி, அங்குள்ள மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த, அப் பகுதி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்துச்சென்றனர்.மக்களின் போராட்டம் எதிரொலியாக, கடந்த பல ஆண்டுகளாக விழுப்புரம், வழுதரெட்டி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால் பிரச்னைக்கு, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்.நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை திட்ட பணிகளின் கீழ், 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சிறிய கல்வெட்டு பாலம் மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியுள்ளது. வழுதரெட்டி பகுதியில் இருந்து 1.50 மீட்டர் உயரம், 1.50 மீட்டர் அகலத்தில் மொத்தம் 130 மீட்டரில் வாய்க்கால் கட்டப்படுகிறது.அதே போல், வழுதரெட்டி - எதிரேவுள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக தலைமை பணிமனை அருகேவுள்ள வாய்க்காலை இணைக்கும் வகையில் 30 மீட்டரில் சிறிய அளவிலான கல்வெட்டு பாலம் கட்டப்படுகிறது. இதன் மூலம் வழுதரெட்டி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக, பாலத்தை கடந்து, அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகேவுள்ள வடிகால் வாய்காலில் சென்றடைய வழிசெய்யப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் கல்வெட்டு பாலம் கட்டும் பணிகள் நடக்கவுள்ளது. இதற்காக , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரைவீரன் கோவில் அருகே சாலையின் ஒருபுரத்தில் பேரிங்கார்டுகள் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.