விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டிலுள்ள பழங்குடியின மக்களுக்கு எரிக்கொட்டகை மற்றும் மயான வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு காலனி பகுதியில் 70 பழங்குடியினத்தை சேர்ந்த இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசிக்கும் பகுதியில் யாராவது இறந்து விட்டால் அவர்களை தொரவி ஆற்றின் கரையோரம் உள்ள இடுகாட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று எரியூட்டுகின்றனர். இப்பகுதிக்கு செல்ல மயான பாதை இல்லாததால் முள் செடிகளுக்கிடையே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மழை காலங்களில் யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் பிரச்னையாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆட்சியாளருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் தனியாக மயான பாதை, எரி கொட்டகை அமைத்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.தேர்தல் சமயங்களில் ஓட்டு கேட்டு வருகின்ற அரசியல் பிரமுகர்கள் தேர்தல் வாக்குறுதி அளிப்பதோடு சரி.எனவே வரும் 2021 தேர்தலில் தங்களது பழங் குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் தான் தேர்தலில் ஓட்டு போடுவதெனவும், இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர் . தேர்தல் வர இன்னும் 4 மாத காலங்கள் உள்ள நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கோரிக்கை நிறைவேற்றி தரவேண்டும் என இந்த பழங்குடியின இருளர் மக்கள் எதிர்பார்க்கின் றனர்.