கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், புதிய மின் இணைப்பு வழங்க, பெண்ணிடம், 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய மேற்பார்வையாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்தவர் தனலட்சுமி, 34; இவர், புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு, மின் இணைப்பு பெற, கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில், மனு அளித்துள்ளார். அவரது மனுவை பரிசீலித்த, கிராமப்பிரிவு மின்வாரியத்தின் முதல்நிலை மேற்பார்வையாளர் பழனிசாமி, 42, மின் இணைப்பு வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத தனலட்சுமி, இது குறித்து, கிருஷ்ணகிரி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் ஆலோசனைப்படி, அவர்கள் கொடுத்த ரசாயன பொடி தடவிய, 8,000 ரூபாயை, மின்வாரிய அலுவலகம் சென்று, மேற்பார்வையாளர் பழனிசாமியிடம் கொடுத்துள்ளார். அதை அவர் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், பழனிசாமியை கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.