காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காட்டவாக்கத்தில் பிளக்ஸ்டிரானிக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திலிருந்து மும்பைக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜியாமி மொபைல் போன்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி கடந்த 20ல் இரவு புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணிக்கு லாரி சென்றது. அப்போது மூன்று லாரிகளில் வந்த 10 பேர் கும்பல் கன்டெய்னர் லாரியை மறித்து இரண்டு டிரைவர்களை தாக்கி கன்டெய்னர் லாரியை கடத்தியது. பின் அதிலிருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன்களை வேறு லாரியில் ஏற்றிச்சென்றது.
எஸ்.பி. பண்டிகங்காதர் விசாரணை நடத்தினார். ஏ.டி.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல்கட்ட விசாரணையில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க மத்தியபிரதேச மாநிலத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.