கடலுார்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முதனை கிராம இளைஞர்கள் சிலர்,
அங்குள்ள செம்பையனார் கோவில் அருகிலுள்ள சித்திரை ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நீரில் மூழ்கிய இளைஞர் ஒருவரின் காலில், ஏதோ ஒரு மர்மபொருள் சிக்கியது. அதனை வெளியே எடுத்துபார்த்தபோது, அம்மன் சிலை என தெரிந்தது.
தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் வேல்முருகன், வி.ஏ.ஓ.,க்கள் ராமச்சந்திரன், சிதம்பரபாரதி ஆகியோர் சென்று, ஒன்றரை அடிஉயரம், சுமார் 4 கிலோ எடையுடைய அம்மன் சிலையை மீட்டு, தாலுகா அலுவலகம்எடுத்து வந்தனர்.
அதில், அம்மன் சிலை வலது கை பின்னமான நிலையில் இருந்தது. பழமையான உற்சவர்
சிலை போல உள்ளது. மேலும், ஐம்பொன் சிலையா அல்லது வெண்கலமா என தெரிய வில்லை. ஏதேனும் கோவில் இருந்து மர்ம நபர்கள் திருடிவந்து வீசிச்சென்றனரா என விசாரித்து வருகின்றனர். ஏரியில் சிலை கிடைத்ததால்,கிராமத்தில் பரபரப்பு நிலவியது.