கோத்தகிரி:கோத்தகிரி 'சன்சைன்' நகர் பகுதியில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட 'ஷெட்' அகற்றப்பட்டது.நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட, சன்சைன் நகர் பகுதியில், 160 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். பல வீடுகளில், இட நெருக்கடியில் நான்கு முதல் ஆறு பேர் வரை வசிக்கின்றனர்.'புதிய வீடுகள் கட்டுவதற்கு, இடம் தேர்வு செய்து தரவேண்டும்,' என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இடம் தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில், கிராமத்தை சேர்ந்தவர்கள், அதே பகுதியில் எவ்வித அனுமதி பெறாமல், ஆறு தகர 'ஷெட்' அமைத்துள்ளனர். தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் திலகவதி ஆகியோர்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, 'ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என, கூறினர்.ஆக்கிரமிப்பாளர்கள் மறுத்தனர். தொடர்ந்து, கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி (பொ) மற்றும் எஸ்.ஐ., வீரம்மாள் ஆகியோர் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.