புதுச்சேரி : பூட்டிய வீட்டில் புகுந்து 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நெட்டப்பாக்கம் லலிதா கார்டனைச் சேர்ந்தவர் பாலாஜி,37; கல்மண்டபத்தில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹரிப்ரியா கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவர் கடந்த 19ம் தேதி இரவு 10:00 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்ட முயன்றபோது, கதவில் இருந்த சாவியை காணவில்லை. உடன் மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றார்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது வாசற்படியில் சாவி கிடந்தது. அதனை எடுத்துக் கொண்டார். கடந்த 21ம் தேதி செலவிற்கு பணம் எடுக்க பீரோவை திறந்த போது, அதில் வைத்திருந்த தங்க ஆரம், நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 13 சவரன் நகைகள் மற்றும் ரொக்க பணமும் திருடு போயிருந்தது.இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.