திருப்பூர்;வீரபாண்டியில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 சென்ட் வண்டிப் பாதையை மீட்க வேண்டு மென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் தெற்கு தாலுகா வீரபாண்டி கிராமத்துக்கு உட்பட்டது திருவள்ளுவர் நகர். அப்பகுதியில், 21 அடி அகலத்தில் இருந்த, 18 சென்ட் அளவுள்ள வண்டிப்பாதை, தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுகா எல்லையில் இப்பிரச்னை நிலவி வருவதால், அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை மீட்க கவனம் செலுத்தவே இல்லை.கொரோனா ஊரடங்கால் பொறுமைகாத்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து முறையிட்டனர். அரசு நிலத்தை மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கே வழங்க வேண்டுமென, மனு கொடுத்தனர். ஊரடங்கால் நீண்ட நாள் அமைதி காத்ததாகவும், இனியும் ஆக்கிரமிப்பை அனுமதிக்க கூடாது.வருவாய்த்துறை அதிகாரிகள் முழு சர்வே நடத்தி, 18 சென்ட் அளவுள்ள, தற்போதைய மார்க்கெட் மதிப்பில், ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வண்டிப்பாதை நிலத்தை மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.