வங்கதேசம் செல்ல காத்திருக்கும் மொபைல்போன்கள்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை தீவிரம் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
வங்கதேசம் செல்ல காத்திருக்கும் மொபைல்போன்கள்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
09:47

ஓசூர்: 'சூளகிரி அருகே, லாரியை கடத்தி கொள்ளையடிக்கப்பட்ட மொபைல்போன்கள், வங்கதேசம் நாட்டிற்கு செல்லும் முன், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என்பதால், தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 ஆயிரத்து, 920 எம்.ஐ., மொபைல்போன்களை ஏற்றிக்கொண்டு கடந்த, 20 மதியம் கன்டெய்னர் லாரி புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில், 21 அதிகாலை சென்று கொண்டிருந்த போது, மூன்று லாரிகளில் வந்த, 10 பேர் அடங்கிய கும்பல், மொபைல்போன் லாரியை வழிமறித்து, டிரைவர்கள் சதிஷ்குமார், அருண் ஆகியோரை தாக்கி விட்டு, லாரியை கடத்தி சென்றது. லாரியில் இருந்த மொபைல்போன்களை கொள்ளையடித்த கும்பல், சூளகிரி அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, தாங்கள் வந்த லாரிகளில் தப்பி சென்றது. சூளகிரி போலீசார் விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மொபைல்போன் கொள்ளையில் ஈடுபட்ட, மத்திய பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டம், அங்கித் ஜான்ஜா கும்பல் தான், தற்போதும் மொபைல்போன் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கொள்ளை கும்பலை பிடிக்க, தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தனிப்படை போலீசார் கூறியதாவது: கடந்த, 19ல் பெங்களூருக்கு வந்த மத்திய பிரதேச கும்பல், 20ல் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் சென்று, மொபைல்போன் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலுமலையில் லாரியை கடத்தி கொள்ளையடித்து விட்டு, கர்நாடகா மாநிலம் வழியாக தப்பி சென்று விட்டனர். இந்த கும்பல் மும்பையில் இருந்து கோல்கட்டா, நொய்டா வழியாக, வங்கதேச நாட்டிற்கு, கொள்ளையடித்த மொபைல்போன்களை ஏற்றி அனுப்பி விடுவர். அதற்கு முன்பாக அவர்களை பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொபைல்போன்களை பறிமுதல் செய்ய முடியாது. வாலாஜாபாத்தில் இருந்து, தமிழக எல்லை வரை, 60க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, மர்ம கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொபைல்போன் லாரியை பின்தொடர்ந்து வருவது தெரியாமல் இருக்க, அடிக்கடி கொள்ளை கும்பல் தங்களது லாரிகளின் பதிவு எண்களை மாற்றியுள்ளது. புனே, கர்நாடகா உட்பட பல்வேறு இடங்களில் தனிப்படை முகாமிட்டு, குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X