தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், அடுத்தாண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.
தர்மபுரியில் நடந்த, ஜல்லிக்கட்டு பேரவை துவக்க விழாவில், அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடக்க, அ.தி.மு.க., அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் விழாவின் போது, எருது விடும் விழா பாரம்பரியமாக நடக்கிறது. அடுத்தாண்டு முதல், மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்த, அரசு நடவடிக்கை எடுக்கும். பாலக்கோடு அடுத்த பல்லேனஹள்ளியில், ஆலாம்பாடி நாட்டு மாட்டின ஆராய்ச்சி மையத்தை அரசு அமைத்து வருகிறது. இதன் மூலம், தேவையானவர்களுக்கு ஆலாம்படி பசுக்கள் மற்றும் காளைகள் வழங்கப்படும். தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, விழா திடலுக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை, அமைச்சர் பார்வையிட்டார். காணொலி காட்சி மூலம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகளுக்கு, வாழ்த்து தெரிவித்தார். இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.