ஒகேனக்கல்: ஒகேனக்கல், காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து, வினாடிக்கு, 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலு காவிரியாற்றில், தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு, 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையிலும் அதே அளவு நீர்வரத்து இருந்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.