கரூர்: கொரோனா பரவல் காரணமாக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால், பஸ்கள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் இருந்ததால், தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், ஜூன், 1 முதல் மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், ஜூன், 30 முதல் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டன. மீண்டும் செப்., 1 முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் மண்டலத்தில், 261 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசின் உத்தரவுப்படி, 74 நகர பஸ்களும், 86 புறநகர் பஸ்களும் என மொத்தம், 160 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று ஆயுதபூஜை என்பதால், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், பயணிகள் இல்லாததால், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதலில், 50 சதவீதம் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் எண்ணிக்கை ஏற்ப அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக ஆயுதபூஜை போன்ற விடுமுறை தினங்களில் இருக்கும் கூட்டம், தற்போது இல்லை. மேலும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக, பஸ்களில் பயணிக்க அச்சம் நிலவுகிறது. உள்ளூர்களில் இரண்டு சக்கர வாகனத்தில், வெளியூர்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், டவுன் பஸ், புறநகர் பஸ்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால், பயணிகள் எண்ணிக்கை ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று கூட்டம் குறைவாக இருந்தால், பஸ்கள் இயக்கப்படாமல் பஸ் ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.