கரூர்: அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் இருந்து கடந்த செப்டம்பர், 6 முதல் பாசனத்துக்காக ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து மற்றும் ஆற்றுப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, தண்ணீர் திறப்பில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை மற்றும் கரூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழையும் பெய்து வருவதால், அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று காலை தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 194 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 74.67 அடியாகவும், தண்ணீர் இருப்பு, 2,594 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. மாயனூர் கதவணை நிலவரம்: மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 11 ஆயிரத்து, 365 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 145 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.