குளித்தலை: தோகைமலை பஸ் ஸ்டாண்டில், சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை, முசிறி, மணப்பாறை, மதுரை, திண்டுக்கல், பாளையம், கரூர்,திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தோகைமலை வழியாக அதிகமான பஸ்களில் பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், பெருநகரங்களுக்கு செல்லும் அதிகமான வாகன ஓட்டிகளும், தோகைமலைவழியாக செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில், 10 ஆண்டுகளுக்கு முன், ஆண்களுக்கான கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. சில ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி பயன்படாத நிலையில் மூடப்பட்டுள்ளது. விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகிலேயே மகளிருக்கான கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடமும் இடிந்து, பராமரிப்பின்றி உள்ளது. அவ்வழியாக திறந்தவெளி வடிகால் செல்வதால் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இரு சுகாதார வளாகங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.